# கொஞ்சம் சட்டம் ; கொஞ்சம் அனுபவம்-1
எதற்காக சட்டக் கல்லூரியல் சேர்ந்தேன்?
தொழிற்கல்வியில் சேர்வதா? கலை, அறிவியல் கல்லூரியில் சேர்வதா?..... நீண்ட பரிசீலணைக்குப் பிறகு ஏதாவது ஒரு கலை அறிவியல் கல்லூரியில் டிகிரி சேர்வது என்று முடிவெடுத்திருந்தேன். நான் முடிவெடுத்து கல்லூரியில் சேர்வதற்காக முயன்றபோதுதான், கல்லூரியில் சேர்வதற்கான காலம் முடிந்து வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்ற தகவல் தெரிந்தது.
1995-ஆகஸ்டு கடைசி வாரத்தில்தான் கல்லூரியில் சேர்வது என்று முடிவெடுத்து, மணப்பாறையில் உள்ள குறிஞ்சி கல்லூரிக்கு அப்பா அழைத்துச் சென்றார். அங்கு மேனேஜர் சந்திரசேகர் எந்த வகுப்பில் சேர்கிறீர்கள் என்று கேட்டார். “எதில் இடம் இருக்கிறதோ, கொடுங்கள்” என்று கேட்டோம். ஏனெனில் அப்போது இடம் கிடைக்குமா? என்பதே பெரிய சந்தேகமாக இருந்தது.
கல்லூரி வகுப்புகள் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், எதில் சேர்ந்தாலென்ன? இடம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில்தான் இருந்தோம். மேனேஜர் அங்கும் இங்கும் போனார். கடைசியில் மைக்ரோபயாலஜியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்றார். காலதாமதாமாக வந்ததற்காக ரெண்டாயிரம் ரூபாய் நன்கொடை தனியாகக் கட்ட வேண்டியிருந்தது. அதையும் தனியாகக் கட்டினோம். எனக்கான வருகைப்பதிவேடு முன்தேதியிட்டு போட்டுக் கொண்டார்கள்.
மைக்ரோபயாலஜி எனக்கு விருப்பமான பாடமாகவே இருந்தது. தனியார் கல்லூரி என்றாலும் கூட அரசுக் கல்லூரியைப் போலவே போராட்டமும், கதையுமாக சுவாராஸ்யமாகத்தான் வகுப்புகள் நகர்ந்தன.
சிறுவயதில் வானொலியில் செய்தி கேட்கும் பழக்கம் எனக்கிருந்தது. மாநிலச் செய்திகளைவிட டெல்லியில் இருந்து ஒலிபரப்பாகும் அகில இந்திய செய்தி தான் எனக்கு விருப்பமாக இருக்கும். “ஆக்காஸவானி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி” இந்தக் குரல் என்னை வெகுவாக ஈர்த்திருந்தது. உச்சரிப்பு அவ்வளவு தெளிவாக இருக்கும். அந்தக்குரல் ஆணா? பெண்ணா? என்ற சந்தேகம் வந்து, அகில இந்திய வானொலிக்கு ரிப்ளை கார்டு எழுதி பதிலை எதிர்பார்த்;திருந்தேன். பள்ளி முகவரிக்கு பதில் வந்து, தலைமை ஆசிரியர் புலவர். தங்கவேல் அவர்கள் என்னை அழைத்து விசாரித்தார். இப்படி பள்ளி நாட்களிலும் ஏராளமான சுவாராஸ்யம் உண்டு. அது தனிக்கதை.
டெல்லியில் இருந்து வானொலியில் ஒலிபரப்பாகும் தமிழ் செய்தியில் மூன்றாவது தலைப்புச் செய்தியாக எப்போதும் ஈழம் பற்றிய செய்தி இருக்கும். “புலிகள் தாக்கியதில் நான்கு இலங்கை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்” , “ராணுவ ஹெலிக்காப்படர்கள் குண்டு வீசியதில் பள்ளிக்குழந்தைகள் கொல்லப்பட்டனர்” போன்ற செய்திகள் என்னை அப்போது வெகுவாகப் பாதித்திருந்தது.
தொலைக்காட்சிகள் எல்லாம் அப்போது கிடையாது. எங்கள் இராசாளிப்பட்டி கிராமத்திற்கே பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரு தொலைக்காட்சி பெட்டிதான் இருந்தது. வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் பார்ப்பதற்கும், ஞாயிற்றுக்கிழமை திரைப்படம் பார்ப்பதற்கும் 11 பட்டி கிராமமே திரண்டு வரும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் எனக்கு வானொலிச் செய்தியம், தினமணி பத்திரிக்கையும் பழக்கமாயின. 60-களில் இருந்து அப்பா தினமணி வாசகர். அந்தப் பழக்கம் என்னையும் ஈர்த்தது. தினமணியிலும் ஈழம் பற்றிய செய்திகளை கூர்ந்து கவனித்து வந்தேன். இந்த ஈர்ப்பு கல்லூரிக் காலங்களில் அதிகமாக இருந்தது.
அப்போது தினமணியில், நந்தன் பத்திரிக்கை தொடங்குவது பற்றிய விளம்பரம் வந்தது. அந்தப் பத்திரிக்கையின் செய்தியாளராக என்னை நியமிக்குமாறு நான் ஒரு கடிதம் எழுதினேன். நீங்கள் கல்லூரி மாணவராக இருப்பதால் இந்தப் பணியை செய்ய இயலாது. நீங்கள் நந்தன் வாசகராக இருக்கலாம் என்று ஒரு பதில் கடிதம் நந்தன் அருணாசலம் அவர்களிடம் இருந்து வந்தது.
அந்தப் பத்திரிக்கையில் வந்த இனம், மொழி தொடர்பான கட்டுரைகள், என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கவிஞர் கே. ஜீவபாரதி அவர்கள் எழுதி பெரும் வரவேற்பைப் பெற்ற “வேலுநாச்சியார் என்னும் வரலாற்றுப் புதின நாடகம்” நந்தனில்தான் தொடராக வந்தது. நந்தன் முதல் இதழ் முதல, கடைசி இதழ் வரை தற்போதும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.
நான் இளங்கலை மைக்ரோபயாலஜி படித்துக்கொண்டிருந்த காலத்தில், அந்தப் படிப்பிற்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் இருந்தன. குறிப்பாக மருத்துவத்துறை, உணவுப் பதப்படுத்தும் துறை ஆகியவற்றில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் இருந்தது.
டிகிரி முடித்தவுடன் எம்.எஸ்.ஸி படித்தால் நல்ல வேலைக்குப் போய்விடலாம் என சக மாணவ, மாணவியர்கள் முடிவெடுத்து எந்தக் கல்லூரியில் சேர்வது என விவாதித்துக் கொண்டிருந்தபோது, என் மனம் மட்டும் வேறு துறையைப் பற்றியே சிந்தித்தது. அது நமது குடும்பப் பொருளாதாரத்திற்கு ஏற்றதாக இருக்குமா? என்ற கேள்வியும் என்னை உறங்கவிடாமல் செய்தது.
பனிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது என்று எழுந்த குழப்பத்தைவிட, டிகிரிக்குப் பிறகு என்ன செய்வது என்ற குழப்பம் சற்று அதிகமாகவே இருந்தது.
குழப்பம் என்பதைக்காட்டிலும், அப்பா அம்மாவின் கடுமையான உழைப்பை மேலும் காவு வாங்கிவிடக்கூடாது, அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனது குழப்பத்திற்குக் காரணமாயிற்று.
உடனடியாக வேலைக்குச் செல்லும் வகையான மேற்படிப்பா? அல்லது பொதுத் தளத்தில் இயங்குவதற்குத் தேவையான கல்வியா? என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தேன்.
இறுதியில் பொதுத் தளத்தில் இயங்குவதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும், நமக்கு நாமே ஒரு பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். நான் தேர்ந்தெடுத்த பாதை சற்று சிரமமானது என்று தெரிந்தேதான் முடிவு எடுத்தேன். எம்.எஸ்.சி மைக்ரோபயாலஜியில் சக நண்பர்கள் சேர்ந்த போது, நான் சட்டக்கல்லூரியில் சேர்வது என்று முடிவு செய்தேன். என்னை சார்ந்தவர்களுக்கு அது ஆச்சரியமாக இருந்தது.
அம்மாவும் அப்பாவும் சற்றுத் தயக்கத்துடனையே ஆமோதித்தார்கள். அதுவரை நான் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் செய்ததில்லை. இதுதான் வேண்டும் என்று கேட்டதும் கிடையாது. சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பம் செய்து நுழைவுத்தேர்வையும் எழுதிவிட்டேன். மூன்றாண்டு சட்டப்படிப்பில் சேர்வதற்கான இடம் மதுரை சட்டக்கல்லூரியில் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
சட்டக்கல்லூரியில் சேர்வதற்காக நானும் அப்பாவும் மதுரைக்குப் புறப்பட்டுப்போய், சேர்க்கைக்கான வரிசையில் நின்றோம். பேராசிரியர் ராதாகிருஷ்ண நாயர் சான்றிதழ்களை சரிபார்த்துக் கொண்டு இருந்தார். என்னுடைய சான்றிதழ்களை திருப்பித் திருப்பி பார்த்தார். என் முகத்தைப் பார்த்து எதுக்காக சட்டக்கல்லூரிக்கு வந்தீங்க? மைக்ரோபயாலஜி படித்துவிட்டு இங்குதான் வரவேண்டுமா? என்றார். அப்பாவின் முகம் சற்று மாறிவிட்டது.
அவர் எதற்காக அப்படிக் கேட்டார் என்பதற்கான அர்த்தம், மூன்றாண்டுகளுக்குப் பிறகு, வழக்கறிஞராக நீதிமன்றத்தில் நுழையும் போதுதான் எனக்குப் புரிந்தது.
தொடரும்…..
No comments:
Post a Comment